நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (29/11/2021) காலை 11.00 மணிக்குத் தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. குளிர்கால கூட்டத்தொடரில் 19 நாட்கள் நாடாளுமன்ற அலுவலகப் பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தொடரின் பல்வேறு அமர்வுகளில் பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது.
மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே மசோதாவை தாக்கல் செய்கிறது. மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து மசோதாவை மக்களவையில் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்கிறார்.
மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படும் என பிரதமர் கடந்த நவம்பர் 19ஆம் தேதி அறிவித்திருந்த நிலையில், மசோதா தாக்கலாகிறது.
இதனிடையே, கூட்டத்தொடரின் முதல் நாளில் முக்கிய பிரச்சனைகளை எழுப்ப காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டுள்ளன.