
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மதரஸா பள்ளி ஆசிரியருக்கு 187 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டம், அலகோடு பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரஃபி. இவர், அங்குள்ள மதரஸா பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், இப்பள்ளியில் படித்து வந்த 16 வயது சிறுமியை, கொரோனா பெருந்தொற்று காலமான 2020ஆம் ஆண்டில் ஆசிரியர் முகமது ரஃபி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பிறகு, ரஃபி சிறுமியிடம் நம்பிக்கையான வார்த்தைகளைக் கூறி 2021ஆம் ஆண்டு காலகட்டம் வரை சிறுமியை தொடர்ந்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனால், பாதிக்கப்பட்ட சிறுமி மன வேதனை அடைந்துள்ளார். ஒரு கட்டத்தில் தைரியத்தை வரவழைத்து தனக்கு நேர்ந்த கொடுமைகளை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக இச்சம்பவம் குறித்து பழையங்கடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில், முகமது ரஃபி மீது வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இது தொடர்பான வழக்கின் விசாரணை, தளிப்பரம்பா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ச்சியாக இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இன்று (09-04-25) தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் முகமது ரஃபி ஒரு தொடர் குற்றவாளி என்பதை கருத்தில் கொண்டு, அவருக்கு 187 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.9 லட்சம் அபராதமும் வழங்கி உத்தவிடப்பட்டுள்ளது.