கடந்த ஜூலை 21 - 23 நாளிட்ட நக்கீரன் இதழில் ‘கடவுளின் தேசத்தில் வரதட்சணைக் கொலைகள்’ என்ற தலைப்பில், கேரளாவில் 20 நாட்களில் விஸ்மயா, ஆதிரா, அர்ச்சனா, சுசித்ரா உள்ளிட்ட 7 பெண்கள் வரதட்சணைக் கொடுமையால் வாழ வேண்டிய தங்களின் வாழ்க்கையை அற்பாய்சிலேயே கருக்கிக்கொண்ட கொடுமை நடந்தேறியிருக்கிறது. ஏற்கனவே வரதட்சணை கொடுத்து கடன்களால் உயிர் மூச்சுத் திணறிக்கொண்டிருக்கும் தங்களின் பெற்றோர்களை மீண்டும் அந்தச் சுமைக்கும் கொடுமைக்கும் ஆளாக்கக் கூடாது என்ற கரிசனத்திலும், தங்கள் பெற்றோர்களுக்குத் தங்களால் மீண்டும் சிரமம் வரக்கூடாது என்ற ஆற்றாமை காரணமாக வாழ வேண்டிய இந்தப் பெண்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டது கேரளாவைக் கடுமையாக உலுக்கியது. வரதட்சணைக் கொடுமைக்கெதிராக அம்மாநில ஆளுநரான ஆரிப் முகமது கான் கூட தனது கவர்னர் மாளிகைக்கு முன்பு போராட்டம் நடத்தியது பல்வேறு மக்களின் கவனத்தை ஈர்த்தது என இதைப் பற்றி நக்கீரன் விரிவாக வெளிப்படுத்தியிருந்தது.
தற்போது முதல்வர் பினராயி விஜயன், பெண்களைக் கசக்கிப் பிழியும் வரதட்சணைக் கொடுமைக்கு எதிராக புதியதொரு கடுமையான அவசரச் சட்டத்தைப் பிறப்பித்திருக்கிறார். அந்த அமன்ட்மெண்ட் கேரள மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த சட்டமான WEC-1/9752/21ன் படி சொல்லப்பட்ட குறிப்பாணையை மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல வளர்ச்சித்துறையின் இயக்குநருக்கு அனுப்பியிருக்கிறார். அந்தக் குறிப்பாணையில் சொல்லப்பட்ட அதிரடிச் சட்ட விவரங்கள் இதுதான். ஏற்கனவே உள்ள வரதட்சணைக்கு எதிரான கேரள அரசின் 10ஆம் சட்டப்பிரிவான 1961 (NO.28OF1961)இல் சொல்லப்பட்டிருப்பதை மேலும் கடுமையாக்கி, 2021இன் படி புதிய உத்தரவு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கேரள அரசின் சட்டப்பிரிவான 1961இல் ஏற்கனவே உள்ள வரதட்சணைக் கொடுமைக்கு எதிராக இருக்கும் பிரிவினை மேலும் கடுமையாக்கியிருக்கிறது.
வரதட்சணை என்பது பல்வேறு வழிகளில் ரொக்கம், விலைமதிப்பிலான கோல்ட் செக்யூரிட்டி பத்திரங்கள், அசையும் மற்றும் அசையா சொத்துக்களாகவோ திருமணத்திற்கு முன்பும் பின்பும், மறைமுகமாக ஒரு பார்ட்டியிடமிருந்து இன்னொரு பார்ட்டிக்கும் அல்லது மணமகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலமாகவோ நேரடியாகவும் மறைமுகமாகவும் திருமணத்திற்கு முன்போ அல்லது பின்போ தரப்படுகிறது என்பது அரசுக்குத் தெரியவந்திருக்கிறது. புதிய சட்டத்தின்படி வரதட்சணை கொடுப்பதும், வாங்குவதும் கடுமையான குற்றம். அப்படி கொடுப்பதும், வாங்குவதும் கண்டறியப்பட்டால் அதற்கு 5 வருட சிறைத் தண்டனை அல்லது அதற்கு குறைவான தண்டனையே கிடையாது. மேலும், குற்றத்தின் தன்மையைப் பொறுத்து கூடுதல் ஆண்டு சிறைத் தண்டனை வழங்க இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது. அதோடு ஆரம்ப கட்ட அபராதமாக 15,000 விதிக்கப்படும். தவிர, பெறப்படும் தொகை அல்லது வரதட்சணை சொத்துக்களின் மதிப்பைப் பொறுத்தும் அபராதத் தொகை கூடுதலாக விதிக்கப்படும். இவ்வளவு வரதட்சணை கொடுக்க வேண்டும் என்று பெற்றோர்களையோ மணமகளையோ நிர்பந்திப்பதும் கடுமையான குற்றமாகப் பார்க்கிறது இந்த அரசு. இந்த வரதட்சணைகள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலமாகவோ, மூன்றாம் நபர் மூலமாகவோ அல்லது மணமகளின் உறவினர்கள் மூலமாகப் பெறப்பட்டாலும் இந்தச் சட்டத்தின் தண்டனை பாயும்.
ஆரம்பத்தில் வரதட்சணை வாங்கியது உறுதிசெய்யப்பட்டால், முதற்கட்டமாக ஆறு மாதம் சிறை தண்டனை மற்றும் 10,000 அபராதம் விதிப்பதோடு, அதன்பின் நடைபெறும் விசாரணையில் குற்றம் உறுதிசெய்யப்படடால், தண்டனைக் காலமும் அபராதமும் அதிகரிக்கும். கேரள அரசின் அதிகார வரம்பான சட்டப்பிரிவு 10இன்படி வரதட்சணை சட்டமான 2004 மற்றும் கேரள அரசின் வரதட்சணைக் கொடுமை தடுப்புச் சட்டத்தின்படியும் தற்போதைய இந்தத் திருத்தங்களை மேற்கொண்டு 2021இன் அமன்ட்மெண்ட் படி குழந்தைகள் மற்றும் பெண்கள் நலனுக்கான துறையின் இயக்குநருக்கு வரதட்சணை வாங்குவதைப் பற்றி கண்காணிக்கும்படியும் தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படியும் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அதன் இயக்குநர் இச்சட்டப்பிரிவை மாவட்டத்திலுள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சம்பந்தப்பட்டத் துறையினரும் இதில் கவனம் செலுத்த வேண்டும். அதேபோன்று கேரள அரசு, இச்சட்டத்தின் இணைச்சட்டமாக (IV) பிரிவின் உட்சட்டமாக வரதட்சணைத் தடுப்பின் சட்டத்தைக் கடுமையாக்கும் வகையில் மேலும் சில ஷரத்துக்கள் பிறப்பிக்கப்படுகிறது.
அதன்படி ஒவ்வொரு அரசுப் பணியாளரும் தங்களது திருமணத்திற்குப் பின்பு ‘நான் எந்த வழியிலும் வரதட்சணை பெறவில்லை’ என அவரும் அவரது தந்தை, மனைவி மற்றும் மாமனார் ஆகியோரின் கையொப்பங்கள் அடங்கிய அஃபிடவிட்டை அவர்கள் சம்பந்தப்பட்டத் துறையின் கண்காணிப்பாளர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயம். ஒவ்வொரு ஆண்டின் நவ. 26 அன்று வரதட்சணைத் தடுப்பு தினமாக இந்த அரசு அனுஷ்டிக்கும் என்பதைத் தெரியப்படுத்துகிறது. அன்றைய தினம் தனியார் மற்றும் மாநில அரசின் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், பிற நிறுவனங்களில் பணிபுரிவோர் உள்ளிட்ட அனைவரும் அன்றைய தினத்தில் ‘வரதட்சணை கொடுக்கவும் மாட்டோம், வாங்கவும் மாட்டோம்’ என்று உறுதிமொழி ஏற்க வேண்டும்.
பினராயியின் அடுத்த அதிரடி அறிவிப்புதான் இந்த வரதட்சணைக் கொடுமை சட்டத்தின் முக்கிய அங்கமாகப் பார்க்கப்படுகிறது. புதிதாக அரசுப் பணியில் சேர்பவர்கள், ‘நான் வரதட்சணை வாங்கமாட்டேன். பணமாகவோ அல்லது பொருளாகவோ வாங்க மாட்டேன்’ என்று அரசுக்குப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். அப்படி செய்தால்தான் அவர்களுக்கு அரசுப் பணி வழங்கப்படும். விசாரணையில் வாங்கியது தெரிய வந்தால், உடனே அவர்கள் வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள். அதற்கான தண்டனை விதிப்பதோடு தனியார் மற்றும் வேறு எந்தத் துறையிலும் அவர்கள் மீண்டும் வேலையே செய்ய முடியாத நிலை ஏற்படும் என்பதுதான் பினராயி விஜயனின் இந்த அமன்மெண்ட்டின் ஹைலைட்.
மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களின் குழந்தைகள் மற்றும் பெண்கள் நலனுக்கான துறையினர் வரதட்சணைக் கொடுமை பற்றியவைகளைக் கண்காணித்து 6 மாதத்திற்கு ஒருமுறை அவர்களின் அறிக்கையை தொடர்புடைய துறையின் இயக்குநருக்கு அனுப்ப வேண்டும். அவற்றை ஆய்வுசெய்யும் இயக்குநர், அதன்மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை அரசுக்கு அவ்வப்போது தெரிவிக்க வேண்டும். மேலும், அனைத்து மாவட்டக் கலெக்டர்களும் இத்துறைக்கான சிறப்புக் கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்படுகிறார்கள் என்கிறது அந்த அதிரடிச் சட்டம். பினராயி விஜயனின் இந்த அதிரடி அமன்ட்மெண்ட், திருமணமான பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான நிம்மதியான வாழ்க்கையை உறுதி செய்திருப்பதோடு, அவர்களது பெற்றோர்களின் வாழ்நாட்களையும் நிம்மதியாக்கியிருக்கிறது என்பதே கடவுளின் தேசத்திலிருந்து வரும் தகவல்கள்.