இந்தியாவில் கரோனா பாதிப்பு என்பது சில மாநிலங்களில் அதிகமாக இருந்து வருகின்றது. மராட்டியம், டெல்லி, குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு சற்று அதிகமாக இருந்து வருகின்றது. நோயாளிகளுக்கு தேவையான படுக்கை வசதிகளை செய்து தர அந்தெந்த மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் பொதுமக்களுக்கு கிடைப்பதில் உள்ள சிரமங்கள் குறித்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இதுதொடர்பாக அவர் பேசும்போது, “மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான வென்டிலேட்டர்கள் கையிருப்பில் இருக்கின்றது. படுக்கைகளும் போதுமான எண்ணிக்கையில் உள்ளன. அரசு மற்று தனியார் மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதிகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள புதிய ஆப் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. சில தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளை அனுமதிக்க மறுப்பதாக தகவல்கள் வெளிவருகின்றது. அந்த மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கைள் பாயும்” என்றார்.