மாணவர்கள் மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை பள்ளி, கல்லூரிக்கு அணிந்து வர கர்நாடக உயர்நீதமன்றம் அதிரடி தடை விதித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில், இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதைக் கண்டித்து, ஒரு தரப்பு மாணவர்கள் காவி தூண்டுகளை அணிந்து கல்லூரிக்கு வரத்தொடங்கினர். இதன்காரணமாக மாணவிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர சில கல்லூரிகள் தடை விதித்தன. சில இடங்களில் இரண்டு தரப்பினரும் மோதிக்கொண்டனர். காவல்துறையினர் சில இடங்களில் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கலைத்தனர்.
அதன்தொடர்ச்சியாக ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணை சூழ்ந்து காவி துண்டு அணிந்தவர்கள், ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட, பதிலுக்கு அந்த மாணவி அல்லாஹு அக்பர் என கோஷமிட்டது என கர்நாடக மாநிலம் கடந்த சில நாட்களாக பதட்டமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் மாணவர்கள் மத அடையாளங்களை பயன்படுத்துவது தொடர்பாக கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இன்று நடைபெற்ற விசாரணையில் மாணவர்கள் மத அடையாளத்தை அடையாளப்படுத்தும் உடைகளை பள்ளி, கல்லூரிகளில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேல் விசாரணை முடியும் வரை இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.