நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர், கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரானது வருகிற டிசம்பர் 22ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த விவாதத்தில் ஆளும் பா.ஜ.க எம்.பி.க்களும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் காரசாரமாக விவாதித்து வருகின்றனர். இதனையடுத்து, நேற்று முன் தினம் (05-12-23) இரண்டாவது நாள் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது. அப்போது, காஷ்மீர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா, காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா ஆகியவை மீது விவாதம் நடந்தது. 2 நாட்களாக நடந்து வரும் இந்த விவாதத்தில் பல்வேறு உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை பேசி வருகின்றனர்.
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று (06-12-23) பதில் அளித்தார். அதில் அவர் பேசியதாவது, “கடந்த 70 ஆண்டுகளாக துரோகம் இழைக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட காஷ்மீர் மக்களுக்கு நீதியும், உரிமைகளையும் அளிப்பதற்காக 2 மசோதாக்களும் கொண்டு வரப்பட்டன. இடம் பெயர்ந்த காஷ்மீர் சமூகத்தினருக்கு சட்டசபையில் 2 இடங்களும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வந்தவர்களுக்கு 1 இடமும் வழங்கப்படும். நேரு பிரதமராக இருந்த காலத்தில் அவரது 2 பெரும் பிழைகளால் காஷ்மீர் மக்கள் பல்லாண்டு காலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
1947ஆம் ஆண்டு நம் நாட்டு ராணுவம், பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருந்தது. பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப்பை அடைந்த போதும், நேரு திடீரென போர் நிறுத்தத்தை அறிவித்தார். இதனால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானது. 3 நாட்கள் கழித்து போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் நம்மிடம் வந்திருக்கும். ‘போர் நிறுத்தம் அறிவித்தது தவறு தான்’ என்று பின்னாளில் நேருவே தெரிவித்தார். அது நேருவின் தவறு அல்ல பிழை.
மற்றொரு பிழை, காஷ்மீர் பிரச்சனையை ஐ.நா.சபைக்கு எடுத்துச் சென்றது. நமது பெரும்பகுதியை நாம் இழந்துவிட்டோம். இது வரலாற்று பிழை. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவு ஒரு தற்காலிக ஏற்பாடுதான். எனவே, அந்த பிரிவு போய்தான் பிரச்சனையை தீர்க்க முடியும். அதை நீக்குவதற்கு உங்களுக்கு தைரியம் இல்லை. நரேந்திர மோடிக்கு தைரியம் இருந்ததால் அந்த பிரிவை நீக்கினார். காஷ்மீரில் பயங்கரவாத சம்பவங்களால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். 2026ஆம் ஆண்டுக்குள், காஷ்மீரில் பயங்கரவாத சம்பவங்களே இல்லாத நிலையை உருவாக்குவதே மத்திய அரசின் இலக்கு” என்று கூறினார்.