Skip to main content

“தமிழகத்தில் தடுப்பூசிகள் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” - திமுக எம்.பி. வில்சன் வலியுறுத்தல். 

Published on 14/05/2021 | Edited on 14/05/2021

 

"Action should be taken to produce vaccines in Tamil Nadu" - DMK MP Wilson insisted.

 

தமிழகத்தில் உள்ள தடுப்பு மருந்து உற்பத்தி நிலையங்களில் கரோனா தடுப்பூசிகளை தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனனுக்கு கடிதம் எழுதியுள்ளார் திமுக மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான பி. வில்சன். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், “சென்னையில் உள்ள கிங் இன்ஸ்டிட்யூட் ஆய்வகம் , செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் (எச்.எல்.எல் பயோடெக்), குன்னூரில் உள்ள பாஸ்டியர் இன்ஸ்டிட்யூட் ஆகிய மூன்று இடங்களிலும், அதிக அளவில் தடுப்பூசிகளை தயாரிப்பதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் இருக்கின்றன. 

 

அந்த ஆய்வகங்களில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பு மருந்துகளின் உற்பத்தியை துவங்குவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக எடுக்க மத்திய சுகாதாரத்துறை முன்வர  வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், “கடந்த 2012ஆம் ஆண்டு 594 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகமானது ஏறக்குறைய இன்றுவரை பயன்பாட்டுக்கு வராத நிலையில், அனுமதிக்கப்பட்ட 408 பணியிடங்களில் 251 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. குன்னூரில் உள்ள பாஸ்டியர் இன்ஸ்டிட்யூட் வளாகமானது இந்தியாவின் தொன்மையான தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று. 

 

இந்த மையங்களைப் பயன்படுத்திக்கொள்வது தொடர்பாக ஏற்கனவே 26.04.2021 அன்று சென்னை உயர் நீதிமன்றத்திலும், 01.05.2021, 11.05.2021 ஆகிய தேதிகளில் டிவிட்டர் தளம் வாயிலாகவும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறேன். இந்த  நிலையில், 10.05.2021 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில், இத்தகைய தடுப்பு மருந்துகளை தயாரிப்பதற்கான போதிய தொழில்நுட்ப வசதிகள் இந்த மையங்களில் இல்லை எனவும், அதேபோல் இரண்டுமுறை டெண்டர் கோரப்பட்டும் செங்கல்பட்டில் உள்ள தடுப்பு மருந்து ஆலையை டெண்டர் எடுக்க யாரும் முன்வரவில்லை என்றும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. 

 

இத்தகைய சூழ்நிலையில்,  இந்த மூன்று மையங்களையும் பயன்படுத்திட இரண்டு வழிகள் உள்ளன. முதலாவது, ஏற்கனவே இந்த தடுப்பு மருந்துகளுக்கான காப்புரிமை பெற்று, தடுப்பூசி தயாரிப்பில் உள்ள சீரம் நிறுவனம், பாரத் பயோடெக் நிறுவனம் ஆகியவற்றுக்கு இத்தகைய தடுப்பு மருந்து தயாரிப்பு மையங்களை ஒப்பந்த அடிப்படையில் வழங்கி, தடுப்பூசிகளை தயாரிக்கலாம். இரண்டாவதாக,  1970 ஆம்  ஆண்டு , பிரிவு 92 இந்திய காப்புரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போதுள்ள பேரிடர் காலத்தைக் கருத்தில்கொண்டு இந்த மருந்திற்கான காப்புரிமையை மத்திய அரசே வழங்க, இந்த மூன்று மையங்களிலும் தடுப்பு மருந்து உற்பத்தியை துவங்க முடியும் . 

 

எனவே, இவையனைத்தையும் கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள இந்த மூன்று இடங்களிலும் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளின் உற்பத்தியை துவங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனனுக்கு எழுதிய கடிதத்தில் பல்வேறு தகவல்களைச் சுட்டிக்காட்டியிருக்கிறார் திமுக எம்.பி. வில்சன்.

 

 

சார்ந்த செய்திகள்