ஜம்மு - காஷ்மீரில் உள்ள சிவகோண்டா கோயிலில் தரிசனம் செய்துவிட்டு ரியாசி பகுதியில் பயணிகளுடன் மினி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் பயணிகள் பலர் பயணம் செய்துள்ளனர். அப்போது பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் பேருந்து தடுமாறி விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு குடியரசுத் தலைவர், ராகுல்காந்தி எம்.பி, காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகையும், நாடாளுமன்ற எம்.பியுமான கங்கனா ரனாவத், ரியாசி பகுதியில் நடந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரது சமூக வலைதளங்களில், தீவிரவாதிகளின் இந்த கொடூர தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அவர்கள் வைஷ்ணவ் தேவி கோயிலுக்கு தரிசன நிமித்தமாக பேருந்தில் சென்று கொண்டு இருந்தனர். அவர்கள் இந்து மக்கள் என்பதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். காயமடைந்தவர்கள் குணம் பெற வேண்டிக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.