
நட்சத்திர பிரச்சாரகர் என்பது ஒரு பதவியோ அந்தஸ்தோ அல்ல என கமல்நாத் தெரிவித்துள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 3ஆம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் 'தப்ரா' தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்துப் பேசிய அம்மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத், அதே தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் இமார்டி தேவியை பாலியல் ரீதியாகத் தரக்குறைவாக பேசினார். இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையாகியுள்ள நிலையில், அவரின் கருத்துக்கு பா.ஜ.க தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, "கமல்நாத் எனது கட்சியைச் சேர்ந்தவர், ஆனால் தனிப்பட்ட முறையில், அவர் பேசியது எனக்குப் பிடிக்கவில்லை" எனத் தெரிவித்தார். ஆனால், கமல்நாத் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்கவில்லை என பா.ஜ.க தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இந்நிலையில், கமல்நாத்தை நட்சத்திர பேச்சாளர் என்ற நிலையிலிருந்து நீக்கி உத்தரவிட்டது தேர்தல் ஆணையம். இந்த சூழலில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கமல்நாத், "நட்சத்திர பிரச்சாரகர் என்பது ஒரு பதவியோ அந்தஸ்தோ அல்ல. தேர்தல் ஆணையத்தின் முடிவைப் பற்றி நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை, நவம்பர் 10க்கு பிறகு எனது கருத்தைத் தெரிவிப்பேன். மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். அவர்களுக்கு எல்லாம் தெரியும்" எனத் தெரிவித்துள்ளார்.