எதிர்க்கட்சிகளும் கடும் அமளிக்கிடையே வேளாண் தொடர்பான இரு மசோதாக்களும் மாநிலங்களவையில் நிறைவேறியது.
மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், இன்று (20/09/2020) காலை வேளாண் தொடர்பான இரு மசோதாக்களைத் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து மசோதாக்கள் மீதான காரசார விவாதம் நடைபெற்றது.
இதனிடையே, அவையில் கடும் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவை துணை தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு மைக்கை உடைத்தெறிய முயற்சி செய்தனர். மேலும் அவை விதிமுறைகள் அடங்கிய புத்தகம் உள்ளிட்ட காகிதங்களை கிழித்து எறிந்ததால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அவை 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து அவை மீண்டும் கூடிய நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இருப்பினும், எதிர்க்கட்சிக்களின் எதிர்ப்பை மீறி மாநிலங்களவையில் வேளாண் தொடர்பான இரு மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
விவசாய உற்பத்திப் பொருட்களின் விற்பனை தொடர்பான ஒப்பந்த மசோதா முதலில் குரல் வாக்கெடுப்பில் நிறைவேறியது. அதைத் தொடர்ந்து விவசாயப் பொருட்களின் விலை மற்றும் பண்ணை சேவைகள் ஒப்பந்த மசோதா பின்னர் நிறைவேற்றப்பட்டது.
ஏற்கனவே மக்களவையில் வேளாண் தொடர்பான இரு மசோதாக்களும் நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையிலும் நிறைவேறியுள்ளது. இரு அவைகளிலும் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதையடுத்து, குடியரத்தலைவர் ஒப்புதல் அளித்த பின் சட்டமாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
வேளாண் மசோதாக்கள் மீது தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா கொண்டு வந்த திருத்தங்கள் தோற்கடிக்கப்பட்டன.
மசோதாக்கள் நிறைவேறிய நிலையில், மாநிலங்களவை நாளை (21/09/2020) காலை 09.00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.