பீகாரில் ரூ. 1700 கோடி செலவில் கட்டப்படும் பாலம் இடிந்து விழுந்து பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
பீகார் மாநிலம் பாகல்பூர் நகரில் கங்கை நதியின் குறுக்கே ரூ.1717 கோடி செலவில் பாலம் கட்டப்படுகிறது. ககாரியா, அகுவானி மற்றும் சுல்தாங்கஞ்ச் பகுதிகளுக்கிடையே கங்கை நதியில் பாலத்தின் மையப்பகுதி கட்டப்பட்டு வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாகப் பாலம் இடிந்து விழுந்துள்ளது.
பாலத்தின் கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்த நிலையில் பாலத்தின் இரண்டு பகுதிகள் நேற்று திடீரென ஆற்றில் உடைந்து விழுந்தன. இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், ரூ.1700 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் பாலம் எப்படி இடிந்து விழுந்தது என்று பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ள பீகார் முதல்வர் நிதிஷ்குமார், தரமற்ற வகையில் பாலம் கட்டியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.