அண்மையில் லட்சத்தீவு சென்றிருந்த பிரதமர் மோடி, ஆழ்கடல் பகுதியில் நீந்தி பவளப் பாறைகளைப் படம் பிடித்த காட்சிகள் வெளியாகி இருந்தது. அதேபோல் கடற்கரை பகுதியில் அமர்ந்து சிந்திப்பதைப் போன்ற புகைப்படங்களும் வெளியாகி இருந்தது. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பாஜகவினரால் 'ட்ரெண்ட்' செய்யப்பட்டது. அதே நேரம் பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து மாலத்தீவு அமைச்சர்கள் இருவரும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் இந்தியா குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் அவதூறு கருத்துகளைப் பதிவு செய்தனர். பிரதமர் மோடிக்கு எதிரான மாலத்தீவு அமைச்சர்களின் கருத்து விவகாரம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அதன் பிறகு, மாலத்தீவு அதிபர் அவர்களைத் தற்காலிக நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘பிரதமர் மோடி அனைத்து விஷயங்களையும் தன் மீது நடத்தப்படும் தாக்குதலாக கருதி செயல்படுகிறார்’ என்று குற்றம் சாட்டினார். இந்த நிலையில், காங்கிரஸுக்கு எதிர்க்கட்சியாக இருக்கக்கூட தகுதி இல்லை என பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா விமர்சனம் செய்துள்ளார்.
அசாம் மாநிலம், கவுகாத்தியில் பா.ஜ.க செயற்குழு கூட்டம் இன்று (11-01-24) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், “ஆட்சி நடத்தும் தகுதியை காங்கிரஸ் ஏற்கனவே இழந்துவிட்டது. இப்போது, மாலத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் எடுத்துள்ள நிலைப்பாட்டால் இந்தியாவில் எதிர்க்கட்சியாக இருக்கும் தகுதியையும் இழந்துவிட்டது. தங்களையும், குடும்பத்தினரையும் வழக்குகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ளவும், கருப்பு பணத்தை பாதுகாக்கவும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கியுள்ளனர்.
அந்த கூட்டணியில் உள்ள அனைவரும் வழக்குகளில் சிக்கியவர்கள். தங்கள் தனிப்பட்ட ஆதாயங்களுக்காக அவர்கள் கைகோர்த்துள்ளனர். அவர்கள், கூட்டணி இந்தியாவுக்கும் நாட்டு நலனுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. காங்கிரஸ் தனது யாத்திரையை ‘அநியாய யாத்திரை’ என்று பெயர் வைக்கலாம். அந்த அளவுக்கு அநீதியை இழைத்துள்ளது. நாட்டு மக்களிடம் பல பிளவுகளை ஏற்படுத்திவிட்டு, இப்போது ஒற்றுமை யாத்திரை நடத்துகிறது” என்று கூறினார்.