மளிகை கடைகளிலும் மதுபானம் விற்கும் புதிய திட்டத்தை ஜார்க்கண்ட் அரசு கையில் எடுத்துள்ளது.
பாஜக ஆட்சி செய்துவரும் ஜார்க்கண்ட் மாநிலத்தில், மாநில அரசின் வருமானத்தை உயர்த்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அதற்கான முக்கிய வழியான அம்மாநில அரசு மதுபான விற்பனையை கையில் எடுத்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு கலால் வரிக்கொள்கை திருத்தத்தின்படி, அரசே சொந்தமாக மதுக்கடைகளைத் திறந்து மது விற்பனை செய்தது. ஆனால், இதில் போதுமான அளவு வருமானம் கிடைக்கவில்லை. இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் செய்யப்பட்ட திருத்தத்தின்படி, மதுக்கடைகளைத் தனியாருக்கு ஏலத்தில் விற்பனை செய்ய திருத்தம் கொண்டு வந்தது. இந்த இரண்டு திட்டங்களும் அரசு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை.
இந்த நிலையில் தற்போது மளிகைக் கடைகளிலும் மதுபானத்தை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதன்படி ஆண்டுக்கு ரூ.1500 கோடி வருவாய ஈட்ட முடியும் என்று ஜார்க்கண்ட் அரசு நம்புகிறது. இந்தத் திட்டத்தின்படி, மாநிலத்தில் ஜிஎஸ்டி வரி செலுத்தும் எந்த மளிகைக் கடையும், ரூ.30 லட்சம் வருவாய் உள்ள மளிகைக் கடையும் மது விற்பனை செய்துகொள்ள அரசு சார்பில் உரிமம் அளிக்கப்பட உள்ளது. மேலும் இந்த வரைவுத் திட்டத்துக்கு முதல்வர் வாய்மொழியாக உத்தரவு கொடுத்துள்ளதாகவும், விரைவில் இது சட்ட திருத்தமாக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. அரசின் இந்த புதிய திட்டம் அம்மாநில குடிமகன்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.