பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜகவின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ்குமார் முதல்வராக இருந்து வருகிறார். இந்த சூழலில் அண்மையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சில நடவடிக்கைகளால் கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய பாஜக அரசு, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்போவதில்லை என கொள்கை முடிவெடுத்துள்ளதாக அறிவித்த பிறகும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென வலியுறுத்தி வருகின்றன. பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளமும் அதே கோரிக்கையை வலியறுத்தி வருகிறது. இதுதொடர்பாக அண்மையில் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் தலைமையில் பீகார் மாநில கட்சிகள் பிரதமரை சந்தித்தன.
அதேபோல் பெகாசஸ் விவகாரத்தில் விசாரணை நடத்தவும், அதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும் மத்திய அரசு மறுத்து வந்த நிலையில், நிதிஷ்குமார், பெகாசஸ் குறித்து கண்டிப்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றதோடு நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தவேண்டும் எனவும் தெரிவித்தார்.
கூட்டணியில் உள்ள கட்சியின் தலைவரே இவ்வாறு கூறியது, பாஜகவிற்கு நெருக்கடியாக கருதப்பட்டது. இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய கவுன்சில் கூட்டத்தில், ”நிதிஷ்குமாருக்கு பிரதமராவதற்கு தேவையான அனைத்து தகுதிகளும் இருக்கிறது” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் முதன்மை பொது செயலாளரும் தேசிய செய்தி தொடர்பாளருமான கே சி தியாகி, "நிதிஷ் குமார் பிரதமர் பதவிக்கான போட்டியில் பங்கேற்காமல் போகலாம். ஆனால் அவருக்கு பிரதமருக்கு தேவையான அனைத்து குணங்களும் உள்ளது என தேசிய கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். நிதிஷ் குமார் பிரதமர் ஆவது தொடர்பாக சில இடங்களில் இருந்து அடிக்கடி மறைமுகமாக ஆலோசனைகள் வந்தன. எனவே எங்களது நோக்கங்களை தெளிவாக வைத்திருக்க இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒருங்கிணைப்பு குழு வேண்டும் எனவும் கே சி தியாகி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர், "வாஜ்பாய் ஆட்சி காலத்தின் போது ஒருங்கிணைப்பு குழு ஒன்று இருந்தது. நாங்கள் கருத்து ரீதியாக வேறுபடும் விஷயங்கள் குறித்து விவாதிக்க, அதுபோன்ற ஒரு குழுவை தற்போது அமைத்தால் வரவேற்போம்" என கூறியுள்ளார். ஐக்கிய ஜனதா தளத்தின் இந்த தீர்மானமும், ஒருங்கிணைப்புக்கு குழுக்கான கோரிக்கையையும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது.