எஸ்.சி.எல் இந்தியா 2021 மாநாட்டில் நேற்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், அரசாங்கத்தின் சிஸ்டம் குறித்து வேதனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நிதின் கட்கரி, "நான் யார் மீதும் எந்தவிதமான குற்றச்சாட்டுகளையும் கூற விரும்பவில்லை. ஆனால் அதிகமான திட்டங்கள் சிஸ்டத்தால் தாமதமாகின்றன. அரசாங்க சிஸ்டத்தில், முடிவுகளை எடுக்காமல் இருப்பதும், முடிவெடுப்பதில் தாமதம் செய்வதும் பெரும் பிரச்சனையாக உள்ளது" எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், "அனைத்து இடங்களிலும் முடிவெடுப்பதில் மிகவும் தாமதம் ஏற்படுகிறது, இது திட்டங்களின் செலவை அதிகரிக்க வழிவகுக்கிறது. இந்தியாவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் முக்கிய துறைகளில் கட்டுமானத் துறையும் ஒன்று என்பதை நாம் அனைவரும் அறிவோம். விவசாயத்திற்குப் பிறகு, கட்டுமானத்துறை நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிக பங்களிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் நிதின் கட்கரி, "பிரதமர் எனது தலைமையில் ஒரு குழுவை நியமித்துள்ளார்...நாட்டின் உள்கட்டமைப்பு திட்டங்கள் தொடர்பான பிரச்சனையைத் தீர்க்க நாங்கள் எப்போதும் முயற்சித்து வருகிறோம்" எனவும் தெரிவித்தார்.