இந்த ஆண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகின்றனர்.
அந்த வகையில், பீகார் மாநிலம் பாட்னாவில் இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் தேதி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து, பெங்களூர், மும்பை என அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணியின் 4வது ஆலோசனைக் கூட்டம் கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் கடந்த 13 ஆம் தேதி காணொளி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 'இந்தியா' கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் நிராகரித்திருந்தார். மேலும் இந்த கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
இதற்கிடையே, நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் இன்று (24-01-24) அறிவித்துள்ளது. இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், "திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவோம் என்று நான் முன்பிருந்தே கூறி வருகிறேன். மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை. இங்கு பா.ஜ.க.வை தனித்து நின்று தோற்கடிப்போம். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியில் ஒரு அங்கமாக உள்ளது” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், காங்கிரஸ் தகவல் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “எங்களிடம் கேட்காமலேயே பாரத் நீதி யாத்திரைக்கு முழு விளம்பரம் கொடுத்த அசாம் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா உத்தரவின் பேரில் காங்கிரஸ் தலைவர்கள் மீது அரசியல் வழக்கு போடப்பட்டிருக்கிறது. அசாமி குவாஹாத்தி எல்லையில் நடந்த நிகழ்வுக்கும், வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அசாம் முதல்வரின் மிரட்டலுக்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்.
பா.ஜ.க.வை தோற்கடிக்க எதையும் செய்வோம் என்று கூறியவர் மம்தா பானர்ஜி. மம்தா பானர்ஜியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணிக்கு வலுவான தூண்கள் என்று ராகுல் காந்தி தெளிவாக தெரிவித்திருக்கிறார். மம்தா பானர்ஜி இல்லாத இந்தியா கூட்டணியை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. இந்தியா கூட்டணிகளில் உள்ள அனைவரையும் ‘இந்திய ஒற்றுமை நீதி பயணத்தில்’ சேரும்படி காங்கிரஸ் தலைவர் பலமுறை கூறியிருக்கிறார். திரிணாமுல் காங்கிரஸ், இந்தியா கூட்டணியின் தூண் போன்றது. நாளை நமது யாத்திரை மேற்கு வங்கத்தில் நுழைகிறது. தொகுதி பங்கீடு தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. விரைவில் முடிவுக்கு வரும். அது அனைவரையும் திருப்திப்படுத்தும்” என்று கூறினார்.