
பத்து ஆண்டு கால ஆட்சியில், மலிவான வகையில் சுயவிளம்பரம் தேடிக்கொள்ளும் மோடியின் தந்திரங்களால் மக்கள் சோர்வடைந்துள்ளனர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை பின்னணியில் வைத்து செல்பி பாயிண்ட்ஸ் அமைக்குமாறு நாட்டிலுள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு கேட்டு கொண்டுள்ளது.
பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதலை கண்டித்து காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளதை தொடர்ந்து நமது பிரதமர் மோடி மிகவும் பாதுகாப்பற்ற மனநிலையில் இருக்கிறார். தனது இமேஜை காப்பாற்றிக் கொள்ள எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறார். முதலில் ராணுவத்தில் செல்பி பாயிண்ட்ஸ் அமைக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தினார். அதன் பிறகு, மூத்த அதிகாரிகள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை ரத யாத்திரை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
தற்போது பல்கலைக்கழக மானியக் குழுவின் மூலம் அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்களுக்கு செல்பி பாயிண்ட்ஸ் அமைக்குமாறு கூறியுள்ளார். இதற்கு முன்பு சந்திரயான் 3 நிலவில் இறங்கியபோது நேரலையில் தோன்றி அந்த நிகழ்ச்சி முழுவதையும் ஆக்கிரமிக்க முயற்சித்தார். அதற்கு முன்பு, கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களிலும் தனது படத்தை அச்சிட்டு வழங்கினார். இவையெல்லாம் பிரதமர் மோடியின் பாதுகாப்பற்ற உணர்வு மற்றும் அறுவறுப்பான பண்புகளுக்கு சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. இந்த பத்து ஆண்டு கால ஆட்சியில், மலிவான வகையில் சுயவிளம்பரம் தேடிக்கொள்ளும் மோடியின் தந்திரங்களால் மக்கள் சோர்வடைந்துள்ளனர். வடகொரியா சர்வாதிகாரிகளைப் போன்ற நிலையை பிரதமர் மோடி எட்டியுள்ளார். இதற்கு தகுந்த பதிலை மக்கள் கூடிய விரைவில் பிரதமர் மோடிக்கு தருவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.