கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கடந்த 12ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில் இந்த பகுதி முஸ்லீம்கள் நிறைந்த பகுதியாக இருப்பதனால் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பாக இதனை சொல்கிறேன் . சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு 'இந்து' மற்றும் அவர் பெயர் நாதுராம் கோட்சே என தெரிவித்தார்.
கமலின் இந்த கருத்து நாடு முழுவதும் பல சர்ச்சைகளையும் விவாதங்களையும் எழுப்பியுள்ள நிலையில், கமலின் கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் தொடர்ந்து கிடைத்து வருகிறது. அந்த வகையில் "அகில இந்திய மஜ்லிஸ்-இ-இதேஹதுல் முஸ்லிமீன் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஒவைசி கமலின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து கூறியுள்ள அவர், "காந்தியை கொன்ற ஒருவரை சதிகாரர் என்றும், பயங்கரவாதி என்றும் கூறாமல் வேறு எப்படி கூற முடியும்? தேசத்தந்தையை கொன்ற ஒருவனை பயங்கரவாதி என்றே கூற வேண்டும். காந்தியை கொன்ற ஒருவனை நாம் பயங்கரவாதி என அழைப்போமா? அல்லது கொலைகாரன் என கூறுவோமா? " என கூறியுள்ளார். தேசிய அரசியலை கருத்தில் கொள்ளும்போது கமலுக்கான இவரின் ஆதரவு முக்கியமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.