
மனைவிக்கு திருமணம் செய்து வைத்த 3வது நாளிலேயே மீண்டும் தன்னோடு அழைத்து வந்த கணவனின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், சாண்ட் கபிர் நகரைச் சேர்ந்த பப்லுவுக்கு, ராதிகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் இருக்கும் வேளையில், ராதிகாவுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த விகாஷ் என்ற நபருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த விவகாரம் பப்லுவுக்கு தெரியவர, இந்த பிரச்சனையை சரிசெய்ய முயன்றுள்ளார்.
அந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்ததால், தனது மனைவியை அவருடையே காதலனுக்கே திருமணம் செய்து வைக்க பப்லு முடிவு செய்துள்ளார். அதன்படி, கடந்த மார்ச் 25ஆம் தேதி நீதிமன்றத்திற்குச் சென்று தனது மனைவி ராதிகாவை அவரது காதலனுக்கு திருமணம் செய்து வைத்தார். இதையடுத்து, அவர்களை ஒரு கோயிலுக்கு அழைத்துச் சென்று ஊர் மக்கள் மத்தியில் திருமண சடங்கு செய்ய வைத்து திருமணம் செய்து வைத்தார். இறுதியாக தனது இரண்டு குழந்தைகளை தானே வைத்து கொள்ள விரும்புவதாக கூறிய பப்லுவின் கோரிக்கையை ராதிகாவும் ஏற்றுகொண்டார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. மனைவிக்கு அவருடைய காதலுடனே திருமணம் செய்து வைத்த சம்பவம் நாடு முழுவதும் பரவலாகப் பேசப்பட்டது.
இந்த நிலையில், திருமணம் முடிந்த 3வது நாளில் அதாவது மார்ச் 28ஆம் தேதி பப்லு, விகாஷ் வீட்டுக்குச் சென்று தனது மனைவியை திரும்ப அழைத்து செல்வதாக கோரிக்கை வைத்துள்ளார். தனது இரண்டு குழந்தைகளை பராமரிக்க மிகவும் சிரமப்படுவதாக பப்லு கூறியதைக் கேட்டு, விகாஷும் அவரது குடும்பத்தினரும், ராதிகாவை பப்லுவுடனே அனுப்பி வைத்துவிட்டனர்.