
யானையை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் கை விலங்குடன் தப்பிச் சென்ற நிலையில் வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தர்மபுரி மாவட்டம் ஏமனூரில் வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் ஆண் யானை ஒன்று சுட்டுக் கொல்லப்பட்ட அதனுடைய தந்தம் திருடப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக வட வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதனடிப்படையில் கொங்கராம்பட்டி பகுதியைச் சேர்ந்த தினேஷ், விஜயகுமார், கோவிந்தராஜ் ஆகியோரை கைது செய்தனர். அதேபோல் செந்தில் என்ற நபரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி கை விலங்குடன் தப்பிய செந்தில் காணாமல் போனார். செந்திலின் மனைவி மற்றும் உறவினர்கள் அவர் தப்பி ஓடிய அடுத்த நாளான 19ஆம் தேதியே காவல்துறையில் புகார் கொடுத்திருந்தனர். உயிருடன் செந்திலை மீட்டுத் தர வேண்டும். அவர் எங்கே சென்றார் என தெரியவில்லை என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று ஏமனூர் காப்புக் காட்டு வனப்பகுதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. விசாரணையில் அது கை விலங்குடன் தப்பிய செந்திலின் உடல் என தெரியவந்துள்ளது. அருகிலேயே நாட்டுத் துப்பாக்கி ஒன்றும் கிடைத்துள்ளது. உடையை வைத்து உயிரிழந்து கிடந்தது செந்தில் என உறுதி செய்யப்பட்டுள்ளது. யானை வேட்டையில் ஈடுபட்டதால் வனத்துறையினரே திட்டமிட்டு செந்திலை கொன்றதாக அவருடைய உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தர்மபுரியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.