இந்தியா முழுவதும் கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்று (07/06/2021) மாலை 05.00 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது, "உலகில் பெரும்பாலான நாடுகள் கரோனா பெருந்தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் மிகப்பெரும் தொற்று மக்களைப் பாதித்துள்ளது. கரோனாவால் நம்மில் பலர் அன்பிற்குரியவர்களை இழந்திருக்கிறோம். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆக்சிஜன் தேவை நாட்டில் ஏற்பட்டது. மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியை இதுவரை இல்லாத அளவு நாம் செய்திருக்கிறோம். அனைத்து கட்டமைப்புகளையும் பயன்படுத்தி ஆக்சிஜனை அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சென்றுள்ளோம்.
ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ தேவைகளை விரைந்து எடுத்துச் செல்லும் வசதிப் பெற்றிருக்கிறோம். மக்களைக் காப்பாற்றுவதற்காக நாட்டின் முப்படைகளையும் பயன்படுத்தினோம். கரோனாவுக்கு எதிரான போரில் உலக அரங்கில் இந்தியா முன்களத்தில் நின்று போராடி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து தேவையான மருந்துகள் அனைத்தையும் கொண்டு வந்துள்ளோம். கரோனா என்ற அரக்கனை ஒழிப்பதற்காக முகக்கவசம், ஆக்சிஜன் ஆகியவற்றை அதிகமாக உற்பத்தி செய்கிறோம்.
கரோனா நமது மிகப்பெரிய எதிரி; அதை வீழ்த்த நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசிதான். தடுப்பூசியை இதற்கு முன் இல்லாத வகையில் விரைவாக உற்பத்தி செய்து பயன்படுத்துகிறோம். வரலாற்றில் இல்லாத அளவுக்குத் தடுப்பூசி உற்பத்தியில் முன்னேற்றம் கண்டுள்ளோம். கரோனா தடுப்பு கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவது மட்டுமே நமக்குக் கவசமாக இருக்கும். தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி உள்ளன" என்றார்.