
மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த 33 வயது நபருக்கு, கடந்த 2001இல் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 1 குழந்தை இருக்கிறது. இந்த சூழ்நிலையில், கணவனும் அவரது குடும்பத்தினரும் தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியதாக மனைவி கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த நபருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.500 அபராதமும் விதித்தது.
தனக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து அந்த நபர் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதி ஷிவ்குமார் டிகே அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பெண் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசு எழுத்தாளராகப் பணிபுரியும் மனைவியை, கணவரும் அவரது குடும்பத்தினரும் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளனர். மேலும், திருமணத்தின் போது, வெள்ளித் தட்டுகள், தங்க மோதிரங்கள், பணம் மற்றும் பல பொருட்கள் வரதட்சணை கேட்டுள்ளனர். கணவர் ஒரு முறை மனைவியை தாக்கியதில் அவர் சுயநினைவை இழந்துவிட்டார். இதனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியிருந்தது என்று வாதிட்டார்,
மனைவி பொய்யான குற்றச்சாட்டுக்களை சமர்பிப்பதாக கணவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஆதாரங்களையும் மருத்துவச் சான்றிதழ்களையும் சமர்பித்து வாதிட்டனர். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஷிவ்குமார் டிகே கூறியதாவது, ‘தாக்குதலுக்குப் பிறகு மருத்துவர் அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்துள்ளார். ஆனால், அந்த தாக்குதல் வரதட்சணைக்காக தான் செய்யப்பட்டது என்பதை நிரூபிக்க முடியவில்லை. கணவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க எந்தவித சாட்சியையும் விசாரிக்கப்படவில்லை. பணம், தங்க மோதிரம் அல்லது பொருட்கள் கோரிக்கை வைத்ததாக அரசு தரப்பு சாட்சியங்களில் முரண்பாடு உள்ளது.
வரதட்சணை கோரிக்கை மற்றும் கொடுமை குற்றச்சாட்டுகளை நிரூபிக்க, ஆதாரங்கள் தேவை என்பது தீர்க்கப்பட்ட சட்டம். சந்தேகத்திற்கு இடமின்றி வரதட்சணை கோரிக்கையை நிரூபிக்கத் தவறிவிட்டது என்ற உண்மையை கீழ் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. கணவருக்கு வெள்ளித் தட்டு வழங்கப்படாததால், அவர் மகிழ்ச்சியில்லாமல் இருந்துள்ளார். ஆனால், அது தற்காலிகமானது. அதன் பிறகு, அவர் அந்தப் பெண்ணுடன் மகிழ்ச்சியுடன் வாழத் தொடங்கிவிட்டார்’ என்று கூறி அந்த நபரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.