வலதுசாரி ஆதரவாளர்களும், வலதுசாரியினரும், தொடர்ந்து பசு கோமியம் புனிதம் அது மருத்துவ குணம் கொண்டது என பல்வேறு கருத்துகளை பொதுவெளியில் சொல்லிவருகின்றனர். உலகை அச்சுறுத்தி வந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில், கொரோனாவை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, தடுப்பூசிகளை பரவலாக்கி கொரோனாவை கட்டுபடுத்தி வந்த சமயத்தில், உத்தரப்பிரதேசம் போபால் தொகுதி பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர், “நான் தினமும் கோமியம் (பசுவின் சிறுநீர்) குடிக்கிறேன். அதனால்தான் நான் எந்த மருந்தையும் எடுத்துக்கொள்வதில்லை. தற்போது வரை எனக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை” என்று தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையானது.
அதேபோல் சமீபத்தில், மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே புற்றுநோய் சிகிச்சைக்கு பசு மாட்டின் கோமியத்தை பயன்படுத்தி மருந்து தயாரிப்பது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பசுவின் கோமியத்தை மனிதர்கள் அருந்துவது உடல் நலத்திற்கு உகந்தது அல்ல என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், பெய்ரலியில் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் மூன்று பி.எச்டி மாணவர்கள், அங்கு பணியாற்றிவரும் போஜ் ராஜ் சிங் என்பவரின் தலைமையில், பசு மற்றும் எருமை மாடுகளின் கோமியம் அருந்துவதற்கு உகந்ததா, கோமியம் அருந்துவதால் ஏற்படும் தீமைகள் என்ன என்பன குறித்து ஆராய்ச்சி நடத்தினர்.
இந்த ஆராய்ச்சி முடிவில், பசு மற்றும் எருமை கோமியங்களில் மனிதர்கள் உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் 14 வகையான பாக்டீரியாக்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்தப் பாக்டீரியாக்கள் மனித உடலினுள் சென்றால், அது வயிற்றில் தொற்றும் மற்றும் வேறு சில பிரச்சனைகளை ஏற்படுத்தும் என தெரியவந்துள்ளது. இதன் காரணமாக மனிதர்கள் கோமியத்தை நேரடியாக உட்கொள்வது உடல்நலனுக்கு உகந்தது அல்ல என்று ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.