புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நாராயணசாமி செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "சி.பி.ஐ. அமலாக்கத்துறை போன்றவற்றைப் பயன்படுத்தி மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு மாநிலங்களில் ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது. இத்தகைய போக்கு எதிர்காலத்தில் பா.ஜ.க.வுக்கும் ஏற்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக பகுதியில் உள்ள ஆதீனங்கள் அரசியல் செய்ய தொடங்கியுள்ளனர்.
அவர்கள் மத கடமைகளை விட்டுவிட்டு அரசியல் செய்வது இந்து மத கோட்பாடுகளுக்கு இழுக்கை ஏற்படுத்தும். ஆதீனங்கள் தங்கள் பதவி பொறுப்புகளிலிருந்து விலகி அரசியல் செய்ய வேண்டும். ஆதீனங்கள் அரசியல் செய்வதை ஏற்க முடியாது. மின்துறை தனியார் மயமாக்கும் கோப்பை ரகசியமாக அனுப்பியுள்ளனர். அதுபற்றிய தகவல்கள் ஏதும் மின்துறையில் இல்லை. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் தகவல் உரிமை அறியும் சட்டத்தின் கீழ் தகவல்களை பெற இருக்கிறோம்.
மேலும் காங்கிரஸ் மூத்த வழக்கறிஞர்களுடன் கலந்து பேசி நீதிமன்றம் செல்ல முடிவெடுப்போம். சம்பளம் கேட்டு போராடிய விற்பனை குழு உறுப்பினர்கள் 14 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். உரிமைக்காக போராடிய ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். சம்பளம் வழங்கினால் அவர்கள் ஏன் போராட்டம் நடத்தப் போகிறார்கள்?
புதுவை காரைக்காலில் சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. கொலை, கொள்ளை, திருட்டு, நிலம், வீடு அபகரிப்பு ஆகியவை நாள்தோறும் நடக்கிறது. இதனால் புதுவையின் அமைதி குலைந்துள்ளது. ரேசன் அரிசியை பாழாக்கிய அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். பா.ஜ.க செய்தி தொடர்பாளர், இஸ்லாமிய இறைத் தூதரை விமர்சித்து பேசியது உலக அளவில் இந்தியாவுக்கு தலை குனிவை ஏற்படுத்தியுள்ளது" எனத் தெரிவித்தார்.