நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே சமயம் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றன. இத்தகைய சூழலில் ஆம் ஆத்மி உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அரவிந்தர் சிங் லவ்லி ராஜினாமா செய்திருந்தார்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அரவிந்தர் சிங் லவ்லி எழுதியிருந்த கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது, கட்சியின் கொள்கைக்கு எதிரானது. மேலும் இதனைப் பொருட்படுத்தாமல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. எனவே தனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் டெல்லி மாநில காங்கிரஸ் கமிட்டியின் இடைக்கால தலைவராக தேவேந்திர யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேனுகோபால் பிறப்பித்துள்ளார். அதில், “காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தேவேந்திர யாதவ் டெல்லி காங்கிரஸ் கமிட்டியின் இடைக்கால தலைவராக நியமிக்கப்படுகிறார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. மேலும் அவர் பஞ்சாப் மாநிலத்திற்கான காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராகவும் தொடர்வார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.