இந்தியைத் திணிக்கக்கூடாது; பாஜக மதவாத கட்சி!- சித்தராமைய்யா அதிரடி
சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் இந்தி மொழியைத் திணிக்கக்கூடாதென போராட்டங்கள் நடத்தப்பட்டன. தற்போது, இந்தித் திணிப்பை எதிர்த்து கர்நாடக மாநில முதல்வர் சித்தராமைய்யா கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆங்கில செய்தி ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இந்தியைத் திணிக்கக்கூடாது. இந்தி மொழியை விரும்பிப் படிப்பவர்கள் படிக்கலாம். இந்தியை தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியாவில் இருக்கும் பல்வேறு மொழிகளில் இந்தியும் ஒன்று. தமிழோ, இந்தியோ அல்லது வேறெந்த அந்நிய மொழிகளோ எதையும் நான் எதிர்க்கவில்லை. ஆனால், அவற்றைத் திணிப்பதை நான் முற்றிலுமாக எதிர்க்கிறேன்.
குறிப்பாக மெட்ரோ ரயில் நிலையங்களில் பயன்படுத்த, இந்தி மொழியில் ஆன வார்த்தைகளை அவர்கள் (மத்திய அரசு) கொடுத்திருந்தார்கள். தமிழ்நாடு அதைப் பயன்படுத்தவில்லை. ஆனால், கேரளாவில் அது பயன்படுத்தப்பட்டது. இது அவரவர் விருப்பம். கட்டாயமாக திணிப்பது கண்டனத்திற்குரிய குற்றம். இது கன்னட மக்களின் உணர்வுகளை நேரடியாக பாதிக்கும் என்றார்.
மேலும், மதவாதம் குறித்து பேசிய அவர், எல்லோருக்கும் அவரவர் சொந்த இடங்களின் மீதான தனிப்பட்ட உணர்வுகள் இருக்கும். அது தேசப்பற்றுக்கு எதிரானது அல்ல. தேசப்பற்று எல்லோருக்குள்ளும்தான் இருக்கிறது. நாட்டில் மதச்சார்பின்மைக்கும், மதவாதத்திற்கும் இடையே போட்டி நிலவுகிறது. பாஜக தான் மதவாதத்தின் ஆயுதம்; அது நாட்டின் ஒற்றுமையை அழித்து வருகிறது. நாம் அதை எதிர்த்து போராடவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
- ச.ப.மதிவாணன்