தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும் ‘பாரத் ஜோடோ’ எனும் பெயரில் இந்தியா முழுவதும் பாத யாத்திரை நடத்தி வருகிறார். கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி, கன்னியாகுமரியில் தொடங்கிய இந்தப் பயணம் கேரளா, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது தெலுங்கானா மாநிலத்தில் ராகுல்காந்தி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, காங்கிரஸ் ஆதரவாளர்களுடன் கைகோர்த்த ராகுல் காந்தி தெலுங்கானா மாநிலத்தின் நாராயண்பேட்டை, மகபூப்நகர் மற்றும் ரங்காரெட்டி ஆகிய பகுதிகளில் நடைப்பயணம் மேற்கொண்டார். அதன் பிறகு புதன்கிழமையன்று ராகுல் காந்தி தனது நடைபயணத்தை ஹைதராபாத்தில் இருந்து தொடங்கினார். அப்போது சார்மினார் நோக்கி சென்று கொண்டிருந்த ராகுல் காந்தியைப் பார்க்க கட்சித் தொண்டர்களும் பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் திரண்டனர்.
அந்தப் பெரும் கூட்டத்தில் இருந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், திடீரென மயங்கி கீழே விழுந்தார். அப்போது கூட்ட நெரிசலில் ஒரு பெண் மயங்கி விழுந்ததைக் கவனித்துக் கொண்டிருந்த ராகுல் காந்தி, உடனே கூட்டத்தை விலக்கி விட்டு அந்தப் பெண்ணுக்குத் தண்ணீர் கொடுத்து நலம் விசாரித்தார். அப்போது அங்கிருந்த கட்சித் தொண்டர்களிடம் ராகுல்காந்தி பேசும்போது, “சரியான ஏற்பாடுகளை முறையாக செய்யுங்கள். அந்தப் பெண் நலமாக உள்ளார் என்பதை உறுதிப் படுத்துங்கள்” எனக் கூறியுள்ளார். இதையடுத்து, நிலை தடுமாறி கீழே விழும்போது அந்தப் பெண்னின் காலணி கூட்டத்தில் சிக்கியது. இதைப் பார்த்த ராகுல் காந்தி, கூட்டத்தில் கிடந்த செருப்பை எடுத்து அந்தப் பெண்ணிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள், சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதன் பிறகு, தனது நடைப்பயணத்தைத் தொடங்கிய ராகுல் காந்தி, கட்சித் தொண்டர்களுடன் மக்களின் ஆரவாரத்துடன் ஹைதராபாத்தில் நுழைந்தார். செல்லும் வழியில் அங்கிருந்த சில சிறுவர்களுடன் சேர்ந்து ராகுல் காந்தி கிரிக்கெட் விளையாடினார். அது மட்டுமல்லாது கட்சி நிர்வாகிகளையும் கிரிக்கெட் விளையாட அழைத்தார். அதனைத் தொடர்ந்து ராகுல் காந்தியைப் பார்க்க கராத்தே பயிற்சி மேற்கொண்டு வரும் சிறுவர்கள் அங்கு வந்திருந்தனர். அதிலொரு சிறுவனுக்கு கராத்தே பயிற்சி அளிப்பது போல் ராகுல் காந்தி சிரித்துக்கொண்டே விளையாடினார். இதை அங்கிருந்த மக்கள் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவு செய்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் தற்போது வைரலாகி வருகிறது.