டெல்லியில் இன்று காலை குடிசைப்பகுதி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 1,500 குடிசைகள் எரிந்து சாம்பலானது.
தென்கிழக்கு டெல்லியின் துக்ளகாபாத் பகுதியில் உள்ள குடிசை பகுதியில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட குடிசைகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். மக்கள் நெருக்கம் மிகுந்த இப்பகுதியில் நள்ளிரவு 12.50 மணியளவில் திடீரென தீ ஏற்பட்டுள்ளது. குடியிருப்பின் ஒரு பகுதியில் ஏற்பட்ட தீ மளமளவெனக் குடியிருப்பு முழுவதும் பரவியுள்ளது. தகவலறிந்து தீயணைப்புத்துறையினர் அங்கு வருவதற்குள் நூற்றுக்கணக்கான குடிசைகளுக்கு தீ பரவியுள்ளது.
இறுதியில் 28 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணிநேரத்திற்கு மேலாகப் போராடி இந்தத் தீயை அணைத்தனர். இந்தத் தீவிபத்தால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படாத நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். ஆரியக்கணக்கான வீடுகள் எரிந்து தரைமட்டமாகியுள்ளதால் இழப்பைத் தற்போது சரிபார்க்க முடியாது எனத் துணை காவல் ஆணையர் ராஜேந்திர பிரசாத் மீனா தெரிவித்துள்ளார். ஒருபுறம் டெல்லியில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், வீடுகளை இழந்த மக்கள் தங்குவதற்கு இடமில்லாமல் தவித்து வருகின்றனர்.