பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.
அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று முன்தினம் முதல் (11.03.2024) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது.
மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயனும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தங்கள் மாநிலத்தில் சி.ஏ.ஏ சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது என்று கூறி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையில், சி.ஏ.ஏ சட்டத்தை ரத்து செய்வதில் சாத்தியம் இல்லை எனவும், அந்த சட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் சி.ஏ.ஏ சட்டத்திற்கு கவலை தெரிவிப்பதாக அமெரிக்கா கூறியது. இது குறித்து அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், “குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அறிவிப்பு குறித்து விவரங்களை கடந்த 11 ஆம் தேதி இந்தியா வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு எங்களுக்கு கவலையளிக்கிறது. இந்த சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். மத சுதந்திரத்திற்கான மரியாதை அளித்தல் மற்றும் அனைத்து சமூகங்களையும் சட்டத்தின் கீழ் சமமாக நடத்தப்படுவது தான் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், இந்த விமர்சனத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது இந்தியாவின் உள்விவகாரம். சி.ஏ.ஏ என்பது குடியுரிமை வழங்குவது; குடியுரிமையைப் பறிப்பது அல்ல. எனவே இது அடிக்கோடிட்டுக் காட்டப்பட வேண்டும். இந்த சட்டம் நாடற்ற தன்மையின் பிரச்சினையைக் குறிக்கிறது. மனித கண்ணியத்தை வழங்குகிறது மற்றும் மனித உரிமைகளை ஆதரிக்கிறது. சி.ஏ.ஏ சட்டம் குறித்த அமெரிக்க வெளியுறவுத்துறையின் கருத்துக்கள் தவறானவை மற்றும் தேவையற்றவை என்று நாங்கள் கருதுகிறோம். டிசம்பர் 31, 2014 அன்று அல்லது அதற்கு முன் இந்தியாவுக்குள் நுழைந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த இந்து, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்த துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு இந்த சட்டம் பாதுகாப்பான புகலிடத்தை வழங்குகிறது.
துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவும் ஒரு பாராட்டத்தக்க முயற்சியை வாக்கு வங்கி அரசியல் நோக்கில் மட்டும் பார்க்கக் கூடாது. இந்தியாவின் பன்மைத்துவ மரபுகள் மற்றும் பிராந்தியத்தின் பிரிவினைக்குப் பிந்தைய வரலாறு ஆகியவை குறித்து சரியான புரிதல் இல்லாதவர்கள் பேசாமல் இருப்பது நல்லது. இந்தியாவின் நலம் விரும்பிகள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட நோக்கத்தை வரவேற்க வேண்டும்” என்று தெரிவித்தார்.