மணிப்பூர் சம்பவத்தால் நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதும் போராட்டக் குரல்கள் கேட்கத் தொடங்கி இப்போது கடல்கடந்தும் ‘சேவ் ஃபார் மணிப்பூர்’ என்று கண்ணீரோடு போராட்டக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
குவைத் நாட்டிற்கு பிழைக்கச் சென்ற இந்தியர்கள் ஓரிடத்தில் ஒன்று கூடி பல்வேறு வாசகங்களுடன் கூடிய பதாகைகள் ஏந்தித் தங்கள் கண்டனக் குரல்களை ஓங்கி ஒலித்துள்ளனர்.
“இந்தியப் பொருளாதாரத்தை முன்னேற்றக் கடல் கடந்து வந்துள்ளோம். ஆனால் இந்தியாவில், மணிப்பூர் சம்பவத்தால் இந்திய தேசமே தலைகுனிந்து நிற்கிறது. நீதி மறைந்து நிர்வாணமாக நிற்கிறது. பழங்குடியினப் பெண் குடியரசுத் தலைவராக இருந்தும் மௌனம் காப்பது ஏன் என்று நம்மால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.இப்படி ஒரு நிலை நடந்திருப்பது வேதனையாக உள்ளது. 70 நாட்களுக்குப் பிறகு வந்த காணொளியிலேயே இப்படி நடந்திருக்கிறது என்றால் 70 நாளில் வேறு என்னவெல்லாம் நடந்திருக்கும் என்பதை ஆய்வு செய்ய வேண்டும். நாங்கள் சாதி, மதம் இல்லாமல் இந்தியனாக ஒற்றுமையாக நிற்கிறோம். இதே போல உலகமெங்கும் உள்ள இந்தியர் ஒன்று கூடி தீர்வு காண வேண்டும். இதை வெறுமன 3 பேரை கைது செய்து மறைத்துவிட நினைக்கிறார்கள்” என்றனர். மேலும், ‘சேவ் பார் மணிப்பூர்’ என்று உரக்க குரல் எழுப்பியும் உள்ளனர்.