ஜிப்மர் மருத்துவமனையில் இந்தியை அலுவல் மொழியாகக் கட்டாயமாக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஜிப்மரில் அலுவலக ரீதியான பயன்பாட்டுக்கு இந்தி மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அலுவல் ரீதியான பயன்பாட்டை இந்தியில் மாற்றுவது தொடர்பாக, புதிய சுற்றறிக்கையை ஜிப்மரின் இயக்குநர் வெளியிட்டுள்ளார். அதில், ஜிப்மரின் பதிவேடு மற்றும் கோப்புகளில் இனி வரும் காலங்களில் இந்தி மொழி மட்டுமே பயன்படுத்தப்படுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜிப்மர் இயக்குநரின் இந்த உத்தரவுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தி.மு.க.வின் மகளிரணிச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "ஒன்றிய அரசுக்கு ஏன் இந்த மொழி வெறி? ஒன்றிய அரசு திணிக்க முயலும் இந்தி வேலையில்லா திண்டாட்டத்தைத் தீர்க்குமா? சமத்துவமின்மை மாறுமா? ஏதேனும் ஒரு சமூகப் பிரச்சனையையாவது திருத்துமா? விரிசல்களை ஆழப்படுத்துவது நல்லதில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.