Skip to main content

கரோனா தடுப்பூசி ஏற்றுமதியை மீண்டும் தொடங்கும் இந்தியா!

Published on 20/09/2021 | Edited on 20/09/2021

 

corona vaccine

 

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம், கரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தது. அதனைத்தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் இந்தியா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்து வந்தது. இருப்பினும் கரோனா தடுப்பூசிக்குப் பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்தியது.

 

இந்தநிலையில் அடுத்தமாதம் முதல் மீண்டும் இந்தியா தடுப்பூசி ஏற்றுமதியைத் தொடங்கப்போவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசி ஏற்றுமதியை 'வேக்சின் மைத்திரி' எனக் குறிப்பிட்டுள்ள மன்சுக் மாண்டவியா, கோவாக்ஸ் திட்டத்திற்கும், அண்டை நாடுகளுக்கும் தடுப்பூசி ஏற்றுமதியில் முன்னுரிமை அளிக்கப்படும் என கூறியுள்ளார். உபரி தடுப்பூசிகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படும் என அவர் கூறியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

மேலும் ஏப்ரல் மாதத்தில் இருந்து நாட்டின் மாதாந்திர தடுப்பூசி உற்பத்தி இருமடங்காக அதிகரித்துள்ளது என்றும், அது அடுத்த மாதத்தில் உற்பத்தி நான்கு மடங்காக உயரவுள்ளது என்றும் தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பயோலாஜிக்கல் - இ போன்ற நிறுவனங்களின் புதிய தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட வாய்ப்புள்ளதால், இந்தாண்டின் கடைசி மூன்று மாதங்களில் மொத்த தடுப்பூசி உற்பத்தி 100 கோடியைத் தாண்டலாம் எனவும் கூறியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்