இந்திய வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், சீனாவின் அத்துமீறல்கள் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு விளக்கமளித்துள்ளார். கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவிற்கு சொந்தமான பகுதியில் சீன வீரர்கள் கொடியேற்றியதாக வெளியான தகவல்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்ச்சி, அந்த செய்திகளில் உண்மை இல்லை என கூறியதுடன், சீன வீரர்கள் இந்திய பகுதியில் கொடியேற்றியாக வெளியான கூற்றுக்கு முரண்படும் வகையிலான புகைப்படங்களை இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோல் லடாக்கின் பாங்காங் ஏரியில் சீனா பாலம் கட்டி வருவதாக வெளியான தகவலையும் அரிந்தம் பாக்ச்சி உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக அவர், "சீனா, பாங்காங் ஏரியில் பாலம் கட்டுவதை இந்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. சுமார் 60 ஆண்டுகளாக சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் இருந்து வரும் பகுதிகளில் இந்தப் பாலம் கட்டப்பட்டு வருகிறது. நமது பாதுகாப்பு நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது' என கூறியுள்ளார்.
அண்மையில் நாடு கடந்த திபெத் பாராளுமன்றம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில், திபெத்துக்கான அனைத்துக் கட்சி இந்திய நாடாளுமன்ற அமைப்பை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீன தூதரகம், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியது. சீன தூதரகம், நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியது சர்ச்சையான நிலையில், சீன தூதரகம் கடிதம் எழுதியதை இந்திய வெளியுறவுத்துறை கண்டித்துள்ளது. "சீன தூதரகம் எழுதிய கடிதத்தின் பொருள், அதன் தொனி மற்றும் எழுதப்பட்ட காலம் ஆகியவை பொருத்தமற்றவை. இந்தியா ஒரு துடிப்பான ஜனநாயகம் என்பதை சீனத் தரப்பு கவனிக்க வேண்டும். இந்திய எம்.பி.க்கள் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் நம்பிக்கைகளின்படி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். சீனத் தரப்பு இந்திய எம்.பி.க்களின் இயல்பான செயல்பாடுகளை மிகைப்படுத்தி, இருதரப்பு உறவுகளை மேலும் சிக்கலாக்குவதை தவிர்க்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என அரிந்தம் பாக்ச்சி கூறியுள்ளார்.
மேலும் அருணாச்சல பிரதேசத்தின் பகுதிகளுக்கு சீனா பெயர் சூட்டியது குறித்து பதிலளித்த அரிந்தம் பாக்ச்சி, "கடந்த வாரம் அருணாச்சல பிரதேசத்தில் சில இடங்களுக்கு சீன தரப்பு பெயர் சூட்டியதாக வெளியான செய்திகளை பார்த்தோம். ஏற்றுக்கொள்ள முடியாத பிராந்திய உரிமைகோரலை ஆதரிக்கும் இதுபோன்ற அபத்தமான நடவடிக்கைகளை எங்களது கருத்துக்களையும் தெரிவித்தோம். இத்தகைய சிறுபிள்ளைத்தனமான செயல்களில் ஈடுபடுவதற்குப் பதிலாக, இந்தியா-சீனா எல்லையில் மெய்யான எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் மேற்குப் பகுதியில் நிலவும் உராய்வுகளை தீர்க்க சீனா எங்களுடன் இணைந்து ஆக்கப்பூர்வமாக செயல்படும் என்று நாங்கள் நம்புகிறோம்" என கூறியுள்ளார்.