முன்னாள் பிரதமர் சந்திரசேகர் குறித்து மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஸ் எழுதி உள்ள புத்தகத்தை டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். இதனை குடியரசுத்துணை தலைவர் வெங்கய்யா நாயுடு பெற்றுக் கொண்டார். புத்தகத்தை வெளியிட்ட பின்னர் பேசிய பிரதமர் மோடி, கலாச்சாரம் மற்றும் கொள்கை பிடிப்புள்ளவராக சந்திரசேகர் வாழ்ந்தார் என்றார்.
முன்னாள் பிரதமர் சந்திரசேகரை சந்தித்தது குறித்து பேசிய பிரதமர், டெல்லிக்கு வந்தால் எனனை சந்திக்க வேண்டும் என சந்திரசேகர் கேட்டுக்கொண்டதாகவும், அதன் படி, அவரை சந்திக்க சென்றதாகவும், அப்போது, அவர் குஜராத்தின் வளர்ச்சி குறித்து கேட்டார், மேலும் பல தேசிய பிரச்சினைகள் குறித்து இருவரும் ஆலோசனை செய்ததாக பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அதன் தொடர்ச்சியாக, இந்த நாட்டை ஆட்சி செய்த அனைத்து முன்னாள் பிரதமர்களுக்கும் பிரமாண்டமாக டெல்லியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவித்தார். எனவே முன்னாள் பிரதமர்களின் வாழ்க்கை முறை குறித்து அவரவர் குடும்பத்தினர் தெரிவிக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன் எனத்தெரிவித்தார்.
அத்துடன் முன்னாள் பிரதமர்களின் பரிசு பொருட்களையும், அவர்கள் எழுதிய நூல்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் அரசுக்கு, முன்னாள் பிரதமர்களின் குடும்பத்தினர் வழங்க முன் வரவேண்டும் என கேட்டுக்கொண்டார். முன்னாள் பிரதமர்களின் அருங்காட்சியகம் மூலம் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் முன்னாள் பிரதமர்களின் வாழ்க்கை வரலாற்றை எளிதில் அறிந்து கொள்ளலாம் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இந்த நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், இந்திய குடியரசுத்துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.