இந்தியாவில் கரோனா மூன்றாவது அலை ஏற்படுவது தவிர்க்க முடியாதது என நிபுணர்கள் எச்சரித்துவந்த நிலையில், கரோனா மூன்றாவது அலை அக்டோபரில் உச்சம் தொடும் என மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய பேரிடர் மேலாண்மை மையம் பிரதமர் அலுவலகத்திற்கு அறிக்கை அளித்துள்ளது.
இந்தநிலையில், ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை நிபுணர் சௌமியா ஸ்வாமிநாதன், இந்திய கரோனா பரவல் எண்டெமிசிட்டி நிலைக்குள் நுழையலாம் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "குறைந்த அளவிலான பரவல் அல்லது மிதமான நிலை பரவல் நடந்துகொண்டிருக்கும் ஒருவகையான எண்டெமிசிட்டி நிலைக்குள் நாம் நுழைகிறோம் என கூறியுள்ளார்.
எண்டெமிசிட்டி (endemicity) என்பது ஒரு புவியியல் பரப்புக்குள் வாழும் மக்களிடம் தொடர்ந்து ஒரு நோய் பாதிப்பு ஏற்படுவதாகும். மக்கள் வைரஸோடு வாழ கற்றுக்கொண்ட நிலையே எண்டெமிசிட்டி என தெரிவித்துள்ள சௌமியா ஸ்வாமிநாதன், "இந்தியாவின் பரப்பளவாலும், மக்கள் தொகையின் பன்முகத்தன்மையாலும், நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு அளவில் எதிர்ப்பு சக்தி இருப்பதாலும் நாட்டின் சில பகுதிகளில் கரோனா பரவல் அதிகமாகவும், சில பகுதிகளில் கரோனா பரவல் குறைவாகவும் இருக்கும் நிலை தொடரலாம்" என தெரிவித்துள்ளார்.
மேலும், முதல் இரண்டு அலைகளில் அதிகம் பாதிக்கப்படாத குழுவினரும், தடுப்பூசி குறைவாக செலுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்களும் அடுத்த சில மாதங்களில் அதிகம் பாதிக்கப்படலாம் என தெரிவித்துள்ள சௌமியா ஸ்வாமிநாதன், குழந்தைகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டாலும், சிலருக்கு மட்டுமே அத்தொற்று பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளார்.
கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் அவசரகால அங்கீகாரம் அளிப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்துள்ள சௌமியா ஸ்வாமிநாதன், கோவாக்சின் தடுப்பூசி தொடர்பாக கூடுதல் தரவுகளை உலக சுகாதார நிறுவனம் கேட்டிருப்பதாகவும், செப்டம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் கோவக்சினுக்கு அனுமதி வழங்கப்படலாம் என தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டு இறுதியில், உலகம் முழுவதும் 70 சதவீதம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கும் என்பதால், அந்த நேரத்தில் கரோனா பெருந்தொற்று முடிவுக்கு வரலாம் எனவும் சௌமியா ஸ்வாமிநாதன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.