இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுக் கேட்கப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த விவகாரம் தொடர்பாக பிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகள் விசாரணையில் இறங்கியுள்ளன.
இதற்கிடையே பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், பெகாசஸ் விவகாரத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து, 8 வாரங்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையில் பிரபல அமெரிக்க ஊடகமான நியூயார்க் டைம்ஸ், பெகாசஸை உலக நாடுகள் வாங்கியது குறித்தும், அந்தநாடுகள் அவற்றை எப்படி பயன்படுத்தியது என்பது குறித்து விரிவான புலனாய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அக்கட்டுரையில், 2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்தியா கடந்த 2017 ஆம் ஆண்டு பெகாசஸ் மென்பொருளை வாங்கியதாக கூறியுள்ளது. இது இந்திய அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அமெரிக்காவின் எப்.பி.ஐ, உள்நாட்டு கண்காணிப்பில் பயன்படுத்துவதற்காக பெகாசஸ் மென்பொருளை வாங்கி சோதனை செய்ததாகவும், ஆனால் அந்த மென்பொருளை பயன்படுத்த வேண்டாம் என கடந்தாண்டு முடிவு எடுத்ததாகவும் அந்த கட்டுரையில் கூறியுள்ளது.