சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. அதன்படி, பிரதமர் மோடி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்றுள்ளார். இந்தத் தேர்தலில், பா.ஜ.கவை வீழ்த்துவதற்காக காங்கிரஸ், சமாஜ்வாதி, தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கினர். எதிர்க்கட்சியினரின் விடாமுயற்சியால் மக்களவைத் தேர்தலில் 234 இடங்களில் வெற்றி பெற்று பிரதான எதிர்க்கட்சியாக நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கிறது.
இந்த இந்தியா கூட்டணியில் பீகாரில் உள்ள விகாஸ்ஷீல் இன்சான் என்ற கட்சியும் அங்கம் வகித்து வருகிறது. இக்கட்சியின் தலைவராக, பீகார் மாநில முன்னாள் முதல்வர் முகேஷ் சஹானி இருந்து வருகிறார். முகேஷ் சஹானியின் தந்தை ஜித்தன் சஹானி, பீகார் மாநிலம் பிரால் பகுதியில் உள்ள அவரது பூர்வீக வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று (16-07-24) காலை, ஜித்தன் சஹானி அவரது அறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். அவரது வயிறு, மார்பு ஆகிய இடங்களில் கத்திக்குத்தி காயங்களும், வெட்டுக் காயங்களும் இருந்தன.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸ் உயர் அதிகாரிகள், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சித் தலைவரின் தந்தை படுகொலை செய்யப்பட்டிருப்பது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நிதிஷ்குமார் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக அம்மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.