Skip to main content

மணிப்பூரில் சுதந்திர தினம் ; ஆயுதங்களைப் பறிமுதல் செய்த பாதுகாப்பு படை

Published on 14/08/2023 | Edited on 14/08/2023

 

Independance day in manipur

 

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இம்பால் பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள சில தடைசெய்யப்பட்ட அமைப்பு சுதந்திர தினத்தன்று வேலை நிறுத்ததுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால், பாதுகாப்பு படையினர் மோதல்கள் நிறைந்த ஐந்து மாவட்டங்களில் தேடுதல் நடவடிக்கையின் போது ஆயுதங்கள், வெடி மருந்துகள் மற்றும் வெடிபொருட்கள் ஆகியவற்றைக் கைப்பற்றினர். மேலும், கலவரம் எதுவும் நடக்காத வகையில் மணிப்பூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

 

நாட்டின் 77வது சுதந்திர தினமான வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி  மணிப்பூர் மாநிலம் முழுவதும் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில்  நடைபெற்று வருகின்றன. இம்பாலில் நடைபெறும் சுதந்திர தின அணிவகுப்பில் துணை ராணுவப் படைகள், மாநில காவல்துறையினர் மற்றும் மாணவர்கள் கலந்து கொள்வார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த வகையில், சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள துய்பெளங் பகுதியில் உள்ள அமைதி பூங்காவில் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான ஒத்திகை கடந்த சனிக்கிழமை ( 12-08-23 ) நடைபெற்றது. 

 

இந்த நிலையில், மணிப்பூரின் ஆயுதமேந்திய குழுக்களின் கூட்டமைப்பான CorCom பொது வேலை நிறுத்தம் மற்றும் அனைத்து சுதந்திர தின நிகழ்வுகளையும் புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளது. அந்த அழைப்பில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அதிகாலை 1 மணி முதல் மாலை 6.30 மணி வரை மருத்துவம், மின்சாரம், நீர் வழங்கல், தீயணைப்பு சேவை, ஊடகம் மற்றும் மத அனுசரிப்பு போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 

சுதந்திர தினத்திற்கு முன்னதாக சிலரால் பிற இனக்குழுக்களின் பகுதிகளில் கலவரம் ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படலாம். அதனால் போராட்ட குழுக்கள் விடுத்த அழைப்பை ஏற்று காங்போக்பி, சுராசந்த்பூர், பிஷ்ணுபூர், மற்றும் இம்பால் மேற்கு ஆகிய பாதிப்புக்குள்ளான இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டிலும் 22 குழுக்கள் வரை சுதந்திர தின ஒத்திகைகளில் பங்கேற்கின்றன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

இந்த நிலையில், இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, தௌபால், பிஷ்னுபூர் மற்றும் சுராசந்த்பூர் மாவட்டங்களில் மத்திய மற்றும் மாநிலப் படையினர் கூட்டுச் சோதனையில் ஈடுபட்டனர். வார இறுதியில் இதுவரை 12 ஆயுதங்கள், சில வெடிமருந்துகள் மற்றும் 8 வெடிபொருட்கள் கிடைத்துள்ளதாக மணிப்பூர் காவல்துறை தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். அந்த ஆயுதங்கள் அரசுப் படைகளில் இருந்த ஆயுதக் கிடங்குகளில் இருந்து கும்பலால் கொண்டு செல்லப்பட்ட கொள்ளையின் ஒரு பகுதியா? என்பது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

 

 

 

சார்ந்த செய்திகள்