ஆந்திரப் பிரதேச மாநிலம், விசாகப்பட்டினம் நகரைச் சேர்ந்தவர் நரேந்திரா (27). இவருக்கு 47 நாட்களுக்கு முன்பாக ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
மீன்பிடி தொழில் செய்யும் நரேந்திரா, வானிலை காரணமாக கடந்த 2 மாதங்களாக அவர் மீன் பிடிக்க செல்ல முடியவில்லை. இதனால் அவருக்கு வருமானம் இல்லாமல் போயுள்ளது. இதனை சமாளிக்க உடனடி கடன் செயலி மூலம் ரூ.2000 பணத்தை கடனாக வாங்கியுள்ளார்.
அதன் பிறகு, அவர் வாங்கிய தொகையை திருப்ப செலுத்த முயன்றுள்ளார். ஆனால் கடன் செயலி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், அதிக அளவிலான வட்டியை கொடுக்க வேண்டும் என்று நரேந்திராவிடம் கூறியுள்ளனர். இதனை மறுத்த நரேந்திராவை, அந்த நிறுவனம் மிரட்டல் விடுத்து துன்புறுத்தியுள்ளனர். கடந்த அக்டோபர் 20ஆம் தேதி, நரேந்திரா மற்றும் அவரது மனைவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து அவர்களது ஆபாசப் புகைப்படங்களை நரேந்திராவினுடைய நண்பர்களுக்கு அனுப்பியுள்ளனர்.
தனக்கு நேர்ந்த கொடுமைகளை யாரிடம் சொல்ல கஷ்டப்பட்ட நரேந்திரா மன அழுத்தத்தில் இருந்துள்ளார். துன்புறுத்தல்களை தாங்க முடியாத நரேந்திரா ஒரு கட்டத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து நரேந்திராவின் குடும்பத்தினர் போலீஸ் கமிஷ்னரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.