மகாராஷ்டிரா மாநிலம், பர்பானி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்திற்கு வெளியே டாக்டர் அம்பேத்கர் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையுடன், அரசியலமைப்பு சட்டத்தின் பிரதியும் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், அந்த அரசியலமைப்புச் சட்டத்தின் பிரதியை சேதப்படுத்தியுள்ளார். இதனால், அந்த பகுதியில் போராட்டங்களும், மோதல் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் பரவியதையடுத்து, அம்பேத்கர் சிலை அருகே 200க்கும் மேற்பட்டோர் திரண்டு முழக்கங்களை எழுப்பினர். கூட்டத்தை கலைக்க போலீசார் வந்தபோது, கலவரம் ஏற்பட்டு கல்வீச்சு சம்பங்கள் நடந்துள்ளது. இதனை தொடர்ந்து, அந்த பகுதியில் உள்ள வாகனங்களுக்கு தீவைப்பு சம்பவங்காளும் அரங்கேறி வருகின்றன.
இதற்கிடையே, போராட்டக்காரகள் பர்பானி ரயில் நிலையத்தை நோக்கி பேரணியாக சென்று ரயில்களை நிறுத்தி 30 நிமிடங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தினர். இதனால் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். புரட்சியாளர் அம்பேத்கர் சிலையுடன் இருந்த அரசியலமைப்பு சட்டத்தின் பிரதியை சேதப்படுத்தியதால் மகாராஷ்டிரா முழுவதும் வெடித்த வன்முறை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.