மத்தியப் பிரதேசம் மாநிலம், போபால் பகுதியைச் சேர்ந்த தீரேந்திர ஸ்ரீவஸ்தவா என்பவரின் வீட்டுக்கு கடந்த 2023ஆம் ஆண்டில் படிதார் என்பவர் வாடகைக்கு குடி வந்துள்ளார்.
இதற்கிடையில், தன்னுடைய உடமைகளை மட்டும் அறையில் வைத்துவிட்டு கடந்த ஆண்டு படிதார் வீட்டை விட்டு காலி செய்தார். இந்த நிலையில், புதிய நபர் ஒருவரிடம் வீட்டை வாடகை விடுவதற்காக தீரேந்திர ஸ்ரீவஸ்தவா காண்பித்துள்ளார். படிதாரின் உடமைகள் வீட்டில் இருந்ததால், கடந்த 8ஆம் தேதி அந்த வீட்டில் இருந்த மின்சாரத்தை துண்டித்துவிட்டு வீட்டை மீண்டும் பூட்டிவிட்டார். மின்சாரம் துண்டிக்கப்பட்ட பிறகு, வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டியில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது.
இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில், வீட்டு உரிமையாளர் தீரேந்திர ஸ்ரீவஸ்தவா மூலம் அந்த வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டியை போலீசார் திறந்து பார்த்துள்ளனர். அதில், நகைகள் அணிந்திருந்தபடி, கைகள் கட்டப்பட்ட நிலையில் இளம்பெண் ஒருவரின் உடல் இருந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் ஒருபகுதியாக வீட்டில் குடியிருந்த படிதாரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தது.
அந்த விசாரணையில், படிதாரும், பிங்கி பிரஜாபதி என்ற பெண்ணும் கடந்த ஐந்து ஆண்டுகளாக லிவ்-இன் உறவில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. தன்னை திருமணம் செய்ய அந்த பெண் வற்புறுத்தியதால் தனது நண்பரின் உதவியோடு படிதார் அந்த பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதன் பிறகு, பிங்கி பிரஜாபதியின் உடலை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து அங்கிருந்து சென்றுள்ளார். அந்த பெண்ணின் உடல் சுமார் 8 மாதங்களாக குளிர்சாதனப் பெட்டியில் இருந்துள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அதில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது என்பது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட பிங்கி பிரஜாபதி கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.