மேற்கு வங்க மாநிலத்தில் மிட்னாபூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில், கர்ப்பிணி பெண்ணான மாமோனி ரூய் தாஸ்(21) என்பவர் மகப்பேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அதன்படி, கடந்த 8ஆம் தேதி மாமோனி ரூய் தாஸுக்கு குழந்தை பிறந்துள்ளது. ஆனால், அவரது உடல்நிலை மோசமடைந்த காரணத்தினால் அடுத்த நாளான 9ஆம் தேதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த மாமோனி ரூய் தாஸ் நேற்று (10-01-25) சிகிச்சை பலனின்று பரிதாபமாக உயிரிழந்தார்.
தவறான சிகிச்சையாலும், காலாவதியான மருத்துவப் பொருளான உமிழ்நீர் பாட்டிலை செலுத்தியதாலும் மாமோனி உயிரிழந்துள்ளார் என்று அவரது உறவினர்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். இதற்கிடையில், இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருவருக்கு காலாவதியான உமிழ்நீரை செலுத்தியதாகக் கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் மோசமான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தவறான சிகிச்சையாலும், காலாவதியான மருத்துவப் பொருட்களைப் பயன்படுத்தியதாலும் இறப்பு மற்றும் நோய்கள் ஏற்பட்டதாகக் கூறி, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, மேற்கு வங்க சுகாதாரத்துறை இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 10 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.