நாடு முழுவதும் ஒவ்வொரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு, மணிப்பூர், உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து, இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அடுத்து வரவிருக்கும் மூன்றாம், நான்காம் கட்டத் தேர்தலுக்காக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், 42 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில், ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலத்தில் மூன்றாம் கட்டமாக நாளை (07-05-24) மீதமுள்ள 4 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், அம்மாநிலத்தில் வெடிக்குண்டு வெடித்து சிறுவன் ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள பாண்டுவா பகுதியில் நேற்று (06-05-24) காலை மூன்று குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, , திடீரென்று, அந்த பயங்கர சத்தத்துடன் வெடிக்குண்டு ஒன்று வெடித்துள்ளது. இதில் சிறுவர்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து, இந்த சம்பவத்தை கண்ட அங்கிருந்தவர்கள், சிறுவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதில், சிறுவர் ஒருவர் மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், காயமடைந்த 2 சிறுவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்னதாக நடந்த இந்த வெடிகுண்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.