
இந்தியாவில் ஏற்கனவே இரண்டு கரோனா அலைகள் ஏற்பட்டுள்ளது. இதில் இதுவரை 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே இந்தியாவில் தற்போது தினசரி கரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. ஆனால், இந்தியாவில் மூன்றாவது அலை ஏற்படுவது தவிர்க்க முடியாதது என நிபுணர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய அரசால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு உறுப்பினர் மணீந்திர அகர்வால், அக்டோபர்-நவம்பரில் கரோனா மூன்றாவது அலை உச்சம் தொடும் எனத் தெரிவித்துள்ளார். தற்போது பரவி வரும் மரபணு மாற்றமடைந்த கரோனாவை விட வீரியமான, புதிய மரபணு மாற்றமடைந்த கரோனா வைரஸ் செப்டம்பர் மாதத்திற்குள் தோன்றினால், அக்டோபர்-நவம்பர் மாதங்களில் கரோனா மூன்றாவது அலை உச்சம் தொடலாம் எனத் தெரிவித்துள்ள மணீந்திர அகர்வால், மூன்றாவது அலை உச்சம் தொட்டாலும் அதன் தீவிரம் இரண்டாவது அலையின் தீவிரத்தில் நான்கில் ஒரு பங்குதான் இருக்குமெனவும், தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். இரண்டாவது அலை உச்சத்திலிருந்தபோது தினசரி கரோனா பாதிப்பு 4 லட்சத்தைத் தொட்டது குறிப்பிடத்தக்கது.
கரோனா பாதிப்புகள் அதிகரிப்பதைக் கணித மாதிரிகளைக் கொண்டு கணிக்க மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை கடந்த ஆண்டு மூன்று பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது. அந்த குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் மணீந்திர அகர்வால் என்பது குறிப்பிடத்தக்கது.