காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கேரனில், எல்லை பகுதியில் ஊடுருவ முயன்ற 7 பாகிஸ்தானியர்களை நேற்று இரவு இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. கொல்லப்பட்ட பாகிஸ்தானியர்களின் உடல் எல்லையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட ஏழு பேரின் உடல்களை எடுத்து செல்ல பாகிஸ்தான் ராணுவத்துக்கு, இந்திய ராணுவம் அனுமதித்துள்ளது. வெள்ளை கொடியுடன் வந்து உடல்களை எடுத்து செல்லுமாறு பாகிஸ்தான் ராணுவத்துக்கு, இந்திய ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கு ட்விட்டர் வாயிலாக பதிலளித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்திய ராணுவம் நேற்று நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்ததாகவும், இந்திய தாக்குதலுக்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் காஷ்மீர் மாநிலத்தில் நிலவி வரும் அசாதாரண சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாதுகாப்பு துறை செயலாளர் அஜித் தோவலுடன் ஆலோசனை செய்தார். அதன் தொடர்ச்சியாக நாளை காலை 09.30 மணியளவில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.