பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இன்று 2 நாள் பயணமாக ரஷ்யா சென்று அந்நாட்டு அதிபர் புதினை சந்திக்கவுள்ளார். கடந்த 20 வருடங்களில் முதல்முறையாக பாகிஸ்தான் பிரதமர் ஒருவர், ரஷ்யாவிற்கு செல்லவுள்ளது கவனிக்கத்தக்கது.
ரஷ்யா செல்வதையொட்டி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ரஷ்ய ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், இந்திய பிரதமர் மோடியை தொலைக்காட்சி விவாதத்திற்கு அழைத்துள்ளார். ”நரேந்திர மோடியுடன் தொலைக்காட்சியில் விவாதிக்க விரும்புகிறேன். கருத்து வேறுபாடுகள் விவாதத்தின் மூலம் தீர்க்கப்பட்டால், இந்திய துணைக்கண்டத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவு கடந்த சில ஆண்டுகளாக மோசமான கட்டதில் இருந்து வருகிறது. பாகிஸ்தான் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து வரும்நிலையில், தீவிரவாதத்தை ஒடுக்கினால் மட்டுமே பேச்சுவார்த்தை என இந்தியா கூறி வருவது குறிப்பிடத்தக்கது.