கேரள மாநிலம் பாலக்காட்டில் அண்மையில் பேருந்து மோதி நிகழ்ந்த கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் அந்த சம்பவம் தொடர்பாக பேருந்து ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் எர்ணாக்குளம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் ஊட்டிக்கு சுற்றுலா செல்ல புறப்பட்டனர். பேருந்தில் 43 மாணவர்கள், 5 ஆசிரியர்கள், 2 ஊழியர்கள் என மொத்தம் 50 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். பேருந்து நள்ளிரவு பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த போது கொட்டாரக்கரையில் இருந்து கோவை நோக்கி சென்ற கேரள அரசுப் பேருந்தின் மீது மாணவர்கள் சென்ற சுற்றுலாப் பேருந்து மோதியது. இதில் நிலை தடுமாறி சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 9 மாணவ மாணவிகள் உயிரிழந்தனர். 45 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில் இது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் பேருந்து ஓட்டுநர் ஜோமுன் அடிக்கடி கொண்டாட்ட மனநிலையில் பேருந்தின் ஓட்டுநர் இருக்கையில் இருந்து எழுந்து ஆடிக் கொண்டே பேருந்தை இயக்கியது தெரியவந்தது. இதற்கு முன்பு இதேபோல் அச்சமூட்டும் வகையில் இருக்கையில் இருந்து எழுந்து நடனமாடிய வகையில் பேருந்து இயக்கிய வீடியோ வைரலாகும் நிலையில் 9 பேரின் உயிரிழப்புக்கு காரணமான பேருந்து ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் பலர் 'இப்படி பேருந்தை ஓட்டினால் ஏன் விபத்து நிகழாது' என கருத்து தெரிவித்து வருகின்றனர்.