காங்கிரஸ் கட்சியில் இளைஞர்களுக்கு பொறுப்பு மற்றும் முக்கியத்துவம் அளிக்க விரும்புகிறேன் என கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள சசிதரூர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் இம்மாதம் 17ம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் பணிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சசி தரூர் மற்றும் மல்லிகார்ஜூன கார்கே கட்சியில் தங்களுக்கான ஆதரவை திரட்ட தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் நேற்று தமிழகம் வந்த சசி தரூர் சைதாப்பேட்டையில் உள்ள ராஜிவ் காந்தி சிலை மற்றும் கிண்டியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதன் பின் சத்திய மூர்த்தி பவனுக்கு சென்ற அவர் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வருவதை தடுக்க காங்கிரஸ் கட்சியினர் தயாராக வேண்டும். தான் கட்சியின் தலைவரானால் இளம் இந்தியாவை உருவாக்குவேன். காங்கிரஸ் கட்சியில் இளைஞர்களுக்கு முக்கியதுவம் அளிக்க விரும்புகிறேன். கட்சியில் இளைஞர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும்.
அதே வேளையில் நீண்ட காலமாக கட்சிப்பணி செய்து வருபவர்களுக்கும் மதிப்பளிக்கப்படும். ஏற்கனவே உள்ளவர்களுக்கும் மதிப்பளித்து புதியவர்களையும் சேர்க்க போராடுவோம். தலைவர் பதவிக்கு நடைபெறும் தேர்தல் நட்பு ரீதியானது. இதில் யார் வெற்றி பெற்றாலும் அது கட்சிக்கான வெற்றி. தலைவர் தேர்தலில் காந்தியின் குடும்பம் யாருக்கும் ஆதரவளிக்காததை வரவேற்கிறேன். மேலும் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பாரத் ஜூடோ யாத்ரா மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது” எனக் கூறினார்.