வீணாக குப்பையில் தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு, அதன் மூலம் பெட்ரோல் தயாரித்து, லிட்டர் 40 ரூபாய் என விற்பனை செய்து வருகிறார் ஹைதராபாத்தைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர் சதீஷ்.
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த சதிஷ், ஹைதராபாத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அப்பகுதி மக்கள் தூக்கி எரியும் பிளாஸ்டிக் குப்பைகள் மூலம் பெட்ரோல் எடுத்து விற்பனை செய்துவருகிறார். பிளாஸ்டிக்கில் இருந்து பெட்ரோல் எடுக்க 'பிளாஸ்டிக் பைரொலிசிஸ்' என்ற முறையை இவர் பயன்படுத்துகிறார். இந்த முறைப்படி பிளாஸ்டிக் குப்பைகளை வேதியியல் மாற்றங்களுக்கு உள்ளாக்கி பெட்ரோல் தயாரிக்கிறார்.
சுத்தப்படுத்தப்படாத இந்த பெட்ரோல் தொழிற்சாலைகளில் இயந்திரங்களை இயக்க தற்போது பயன்படுத்தப்படுகிறது. இந்த பெட்ரோலை லிட்டர் 40 ரூபாய் என அவர் விற்று வருகிறார். மேலும், இதனை வாகனங்களுக்கு பயன்படுத்த முடியுமா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் 1 கிலோ பிளாஸ்டிக்கை வைத்து அதன் மூலம் 1 லிட்டர் பெட்ரோல் வரை எடுக்க முடியும் என்கிறார் சதிஷ். இவரின் இந்த முயற்சிக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.