ஹத்ராஸ் செல்ல முற்பட்டபோது பிரியங்கா காந்தியின் உடையை பிடித்து அவரை தடுத்து நிறுத்தியது தொடர்பாக உ.பி., காவல்துறை விளக்கமளிக்க கோரி தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஹத்ராஸில் 19 வயது இளம்பெண்ணை நான்கு பேர் சேர்ந்த கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட பெண், இரண்டு வாரங்கள் உயிருக்கு போராடி டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதனைத் தொடர்ந்து நடந்த அடுத்தடுத்த சம்பவங்களும் மிகப்பெரிய சர்ச்சைகளாக வெடித்தது. இதனைத்தொடர்ந்து, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல நேரில் சென்றனர்.
அப்போது போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தியபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஆண் காவலர் ஒருவர் பிரியங்கா காந்தியின் குர்தாவை பிடித்து அவரை தடுத்து நிறுத்தினார். காவலரின் இந்த செயல்பாடு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்காக நொய்டா காவல்துறை மன்னிப்பு கோரியது. இது குறித்து நொய்டா மாவட்ட காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், “பெண்களின் பாதுகாப்பு, கண்ணியத்தை உறுதி செய்வதில் நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம். நடந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பிரியங்கா விவகாரம் தொடர்பாக தகுந்த விளக்கமளிக்க வேண்டும் என உத்தரபிரதேச காவல்துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.